கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு: சென்னை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி
சிறுவர்கள் டூவீலர், கார் ஓட்டுவது அதிகரிப்பு
திருப்பூர் :
திருப்பூரில், நாளுக்கு நாள் சிறுவர்கள் டூவீலர் மற்றும் கார் ஓட்டுவது அதிகரித்து வருகிறது. எனவே, இது குறித்து தங்கள் குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டுமென, கல்வித்துறையினர் தெரிவித்துள்ளனர்.பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவ, மாணவியர் வாகனம் ஓட்டினால், 25 வயது வரை லைசென்ஸ் பெற இயலாது என திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தெரிவிக்கிறது. அவர்களின் பெற்றோருக்கு, 25 ஆயிரம் அபராதம் முதல், 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், சில பெற்றோர்கள் பெருமைக்காக சிறுவர், சிறுமியர்களிடம் வாகனத்தை கொடுத்து ஓட்டவிடுகிறார்கள்.அவர்கள் அதிக வேகத்தில் வாகனத்தை கட்டுப்பாடு இல்லாமல் ஓட்டிச்செல்கிறார்கள். மேலும் ஒரே வாகனத்தில் இரண்டு அல்லது மூன்று பேரை அமர்த்திக்கொண்டு வேகமாக செல்கிறார்கள் இதன் காரணமாக பின்னால் வருபவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள். போக்குவரத்து விதிமீறல்கள் அதிகரித்து வருகின்றன.
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்ட சுற்றறிக்கை:கடந்த ஓராண்டில், 60 வழக்குகள் இதன்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, 2017ல் மட்டும், 50 மைனர்கள் ரோடு விபத்து வழக்கில் சிறார் நீதி வாரியம் முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். குழந்தைகளின் வயதை கருத்தில் கொண்டு பல வழக்குகள் பதிவு செய்யப்படாமலும் உள்ளன.
இதுகுறித்து பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். குழந்தைகள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். இன்ஜின் அளவு, 50 சிசி., குறைவாக இருக்கும் வாகனங்கள் மட்டுமே, மைனர்களால் இயக்கப்பட வேண்டும் என, மோட்டார் வாகன சட்டம் எடுத்துரைக்கிறது.அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்களும், மாணவர்களின் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதையும், பள்ளியில் பார்க்கிங் செய்யவும் அனுமதிக்ககூடாது. மோட்டார் வாகன சட்டம் குறித்து பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இதனை உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிட்டுள்ளார்.